ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 14 July 2015

Baahubali – The beginning (2015) Tamil, Telugu, Hindi, Kannada & Urdu!!!‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா?  உத்தம வில்லனைப் போன்ற ஒரு உலகத் திரைக்கதை இந்தப் படத்தில் இருக்கிறதா? அல்லது தசாவதராத்தைப் போன்ற ஒரு கிராஃபிக்ஸ் அளவுகோலையாவது எட்டியிருக்கிறார்களா? பார்ப்போம்.

ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த டைட்டிலிலேயே ஒரு பெரிய குறையக் கண்டுபிடித்து விட்டேன். படம் போடுவதற்கு முன்பு ஆப்ரேட்டரிடம் சென்று “ஹலோ தெலுங்கில் பாஹூபலி.. தமிழில் ஏன் பாகுபலி என்று போஸ்டர் ஒட்டிருயிருக்கிறீர்கள்? பாஹூபலி என்றுதானே இருக்க வேண்டும். அப்படியென்றால் பறந்த தோள்களை உடையவன் என்று பொருள்” என்றேன்.  . ஏற இறங்கப் பார்த்தவர் “அகன்ற தோள்களுக்கு” ஏதோ ரைமிங்காகச் சொல்ல வாயெடுக்க, நான் வாயை மூடிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

முதலில் நான் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் – கடவுள் வாழ்த்து!!!

ஒரு திரைப்படம் நமக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதைத் தாண்டி, வெறும் கண்ணை மூடிக்கொண்டு சினிமா பார்க்காமல், ஒரு சினிமா ரசிகனாக அதில் கதை, திரைக்கதை, வசனம், குத்துப்பாட்டு, பிட்டு சீன், பக்கத்து இருக்கை ஃபிகர், ஸ்க்ரீனில் இருக்கும் ஓட்டை, இண்டர்வலில் திங்கும் முட்டை பப்ஸ், தியேட்டர் கக்கூஸ் க்ளீன்லினஸ் போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து அனைத்து விஷயங்களிலும் அந்தத் திரைப்படம் நம்மை குஷிபடுத்துகிறதா என்பதைப் பொறுத்தே நாம் அந்தப் படத்தின் தரத்தை சொல்ல வேண்டும். அப்படித்தான் பார்க்க வேண்டும். நானும் அப்படித்தான் பார்த்தேன். தா.. பக்கத்து சீட்டில் மொக்கை பீஸ் என்றதும் ஆரம்பத்திலேயே மூட் அவுட் ஆகிவிட்டேன்.

பாகுபலியின் முதல் காட்சியே படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காட்டிவிட்டது. ரம்யா கிருஷ்ணனை போர் வீரர்கள் வேடம் கொண்டு இருவர் துரத்தி வந்தனர். அப்பொழுதே கண்டுபிடித்துவிட்டேன். இது ஒரு ராஜா காலக் கதை தான் என்று. எதிர்பார்த்தது போலவே கடைசி வரைக்கும் எல்லா காட்சிகளுமே அந்த காலத்தில் நடப்பது போன்றே அமைக்கப்பட்டிருந்தது பெரும் வேதனை.

நமக்கும் ஆந்த்ராவுக்கும், ஹீரோ அடித்தால் வில்லன் இங்கு பத்தடி பறப்பது, அங்கு பதினைந்தடி பறப்பது என்பன போன்ற சிறு சிறு வித்யாசங்கள் இருந்தாலும், இன்றய கால கட்டத்தில் விட்டலாச்சாரியா டைப் படங்களை நம்மால் ரசிக்க இயலாத காரியம். தமிழ்ப் படங்கள் இதுபோன்ற மொக்கைகளிலிருந்து விடுபட்டு இன்று நேற்று நாளை போன்ற உலக்கபடங்களை ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் பாகுபலியை இந்தியாவின் ப்ரம்மாண்டம் என எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?  

தண்ணீருக்குள் தன் இஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. எப்படி தண்ணீருக்குள் ஒரு மனிதனால் நடக்க முடியும்?  அதுவும் அவள் பின்னால் இருக்கும் அருவி CG என்பது எனக்கு மட்டும் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. தியேட்டரில் மற்ற அனைவரும் அது என்னவோ ஒரிஜினல் அருவி என நம்பி வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். நான் படித்த காம ரூபக் கதைகள், எக்ஸைல் போன்ற புத்தக அறிவை வைத்தே அது CG என்பதை என்னால் மட்டும் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. ஒரிஜினல் தண்ணீருக்குள்ளே நடப்பதே முடியாத ஒன்று எனும்போது, CG செய்யப்பட்ட தண்ணீருக்குள் எப்படி ஒரு பெண்ணால் நடக்க முடியும்? இப்படி கொஞ்சம் கூட ஒன்றாத காட்சிகளுடனேயே பாகுபலி தொடங்குகிறது. இந்த ஒரு காட்சியிலிருந்தே படத்தின் மேக்கிங் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பது தெரிந்துவிடும்.  

”படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அதை எப்படிக் கற்பனை செய்துகொள்வது?” என்றேன் அருகிலிருந்தவரிடம். “ஏன் நாயே கதை புக்கா படிக்கிற? கற்பனை பன்னிக்கிறதுக்கு… அதான் எல்லாத்தையும் அதுலயே காமிக்கிறாய்ங்கல்ல… மூடிட்டு பாரு” என்றார். இவ்வளவு நேரம் கண்ணை மூடி கற்பனை செய்து கொண்டிருந்த என் அறிவுக்கண்ணை அதிகபட்சம் இரண்டே கெட்ட வார்த்தைகளிலேயே மடார் என்று திறந்து விட்டார்.  அந்த நிலப்பரப்பில் திடீரென பனி பெய்கிறது.. அட்லீஸ்ட் பனி பெய்யப்போகிறது என்றொரு வார்ங்க் கூட கொடுக்கவில்லை. இறுதியில் போர் நடக்கும் இடமே அது வரை வரவில்லை. ஏற்கனவே கண்பித்த இடத்தில் மட்டுமே போர் நடக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தானும் குழம்பி என்னையும் குழப்பியிருக்கிறார் ராஜமெளலி.

ஒரு புரட்சிக்காரியைச் சந்திக்கிறார் ஹீரோ. அப்படியே Game of thrones ஜான் ஸ்நோ யிக்ரிட்டை கோட்டைக்கு வெளியே சந்திக்கும் காட்சிகள் ஓடுகிறது. Game of Thrones என்றதுமே துவண்டு போயிருந்த நான் குஷியாகி எழுந்து உட்கார்ந்தேன். ”அப்பாடா அப்ப ஜான் ஸ்நோ, யிக்ரிட்டுக்கு இடையே நடக்கும் ஜலபுல ஜங்ஸும் வரும்” என மனதிற்குள் எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். தமன்னாவின் உடைகள் வேறு யிக்ரிட் மாதிரியே இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. ஆனால் நடந்தது என்ன? நான் நம்பியிருந்த ஒரு காட்சியும் என்னைக் கைவிட்டது.

அப்புறம் ஹீரோ அந்த நாட்டுக்கு மாறு வேடத்தில் செல்கிறார். அங்கிருக்கும் சுதந்திர தேவி போன்ற சிலையை அலேக்காகத் தூக்குகிறார். ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். கட்டப்பாவுடன் சண்டை போடுகிறார். சண்டையில் மண்டையில் கால் வைத்துக்கொள்கிறார். அப்போது வரும் காட்சிகள், இசை அனைத்துமே விட்டலாச்சாரியா காலத்தில் உள்ளவை. காட்சிகளுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அனிரூத்தையோ, ஹிப் ஹாப் தமிழாவையோ விட்டு லேட்டஸ்ட் ட்ரெண்டில் ஒரு ராப்பை பின்னனியில் போட்டு விட்டிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.

இந்த இடத்தில் அமரேந்திர பாகுபலி யார் என்பதை கிட்டப்பா.. ச்ச கட்டப்பா (எப்புடி என் காமெடி சென்ஸ்) விளக்குகிறார். ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. அதுவும் பழைய ஃப்ளாஷ்பேக். கதையே ராஜா காலத்தில் நடக்கிறது. ராஜா காலத்துக் கதையில் ஃப்ளாஷ்பேக் என்றால் அதைவிடப் பழைய கதையாகத்தானே இருக்கும்.

இத்துடன் கதையை முடித்துவிட்டால் படம் முடிந்துவிடுமல்லா? அதனால் வேண்டுமென்றே வலிய திணிக்கப்பட்ட போர்காட்சி. ரிட்டர்ன் ஆப் த கிங் படத்திலோ த டூ டவர்ஸ் படத்திலோ படத்தின் இறுதியில் வரும் போர்க் காட்சிகளுக்கு நல்ல பில்ட் அப்புகள் இருக்கும். அதனால் போர் செயற்கையாக இல்லாமல் இயற்கையாக இருக்கும். இது தெலுங்கு படம் என்பதால் மிகவும் செயற்கையாக இருக்கிறது.  அதில் காண்டால்ஃப் மந்திரங்களைச் சொல்லி மலைப்பாதைகளை உடைக்கும் போதோ, அரகோன் பேய்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதோ எதுவுமே செயற்கையாக தெரியாது. ஏனென்றால் படத்தின் ஜானர் அப்படி. ஆனால் இங்கு படத்தின் ஆரம்பத்திலேயே பிரபாஸ் மலையில் தாவுவதைக் காண்பித்து இப்படித்தான் படம் இருக்கப்போகிறது என்பதைக் காண்பித்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் இது தெலுங்குப் படம்.  நான் பீட்சா பர்க்கர் மட்டுமே சாப்பிடுகிறேன். ஹாலிவுட் படங்களை மட்டுமே அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பேன். 

அதுவுமில்லாமல் ஓரிரு வசனங்களிலேயே போரும் துவங்குகிறது. ட்ராய் படத்தில் போர் துவங்குவதற்கு “இவன் பொண்டாட்டிய அவன்  அழைச்சிட்டு பொய்ட்டான். அவன் பொண்டாட்டிய இவன் அழைச்சிட்டு பொய்ட்டான்” என்ற ஒரு வலுவான காரணம் இருக்கும். ஆனால் இங்கு எல்லாருடைய மனைவிகளும் அப்படியே இருக்கின்றனர். ஆனாலும் போர் துவங்குகிறது. என்ன கன்றாவி லாஜிக்கோ.

இவ்வளவு தான் பாகுபலி.

இதுவரை நான் எழுதியதைப்  பார்த்தாலே பாகுபலியின் பிரச்சனைகள், எனக்கு இருக்கும் ப்ரச்சனைகள், சாருவுக்கு இருக்கும் ப்ரச்சனைகள் என அனைத்தும் புரிந்துவிடும். பிரம்மாண்டம் மட்டுமே படத்தை காப்பாற்ற முடியும் என்ற ராஜமெளலியின் எண்ணம் எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாது என்பது இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்டைப் பார்த்தாலே தெரியும். மூன்று நாட்களில் வெறும் 166 கோடியை மட்டுமே கலெக்ட் செய்திருக்கிறது. போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத CG. தெலுங்குப் படங்களின் தரத்திற்கு இவை பரவாயில்லை. உத்தம வில்லன் படத்தில் படம் முழுவதுமே கமலை CG யில் தான் காண்பித்தார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அது எவ்வளவு தத்ரூபமாக இருந்தது? எனவே தமிழ்ப் படங்களின் செய் நேர்த்திக்கு பாகுபலி அருகில் கூட வராது.

ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும்? அது இடம்பெறும் காட்சிகள் எவ்வளவு தரமாக இருக்கவேண்டும்? ஒட்டுமொத்தமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் மனதுக்கு நெருக்கமாக எப்படி சொல்ல வரும் கதையை மாற்றுவது? Syd field இன் Screenplay யை படித்திருந்தாலே இதெல்லாம் தெரிந்துவிடும். ஆனால் ராஜமெளலி என்னும் மடையர் அந்தப் புத்தகைத்தையெல்லாம் கண்ணெடுத்தும் பார்த்திருக்க மாட்டார் போல. அட்லீஸ்ட் அதன் தமிழ் வெர்ஷனையாவது வாங்கி ஒரு முறை வாசித்திருக்கலாம்.

எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள் காட்சிகளைத் தவிற ஆங்கிலப்படங்களைப் போல ஒரு பெட்ரூம் சீனோ, அல்லது நல்ல ஒரு லிப் லாக் சீனோ வைக்க மாட்டார்கள் என்பதற்கு பாகுபலி ஒரு உதாரணம்.

போர்க்காட்சிகளின் போது கடுப்பாகி “நம்மாட்களுக்கு ஒரு புதிய மொழியை உருவாக்குவது அத்தனை எளிது என்ற எண்ணம்.  டால்கீன் உருவாக்கிய எல்விஷ் மொழியைப் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள சிக்கலான வார்த்தைகள் பற்றியும், அதற்கு எத்தனை காலம் ஆனது என்பது பற்றியும் இவர்கள் கொஞ்சமாவது படிக்கவேண்டும்” என்றேன் அருகிலிருந்தவரிடம். ”நாங்க ஏண்டா நடுராத்தி பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குப் போறோம்” என்றார் அவர். தா.. நா அதெல்லாம் படிச்சேன்ல.. இவனுங்க ஏண்டா படிக்க மாட்டேங்குறாங்க.. இல்லை அதைப் படிச்ச என்னிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல” என்று புலம்ப ஆரம்பித்ததும் அவர் கீழே குனிந்து செருப்பைப் பார்க்க நான் மறுபடியும் விமர்சன மோடுக்குத் திரும்பினேன். புதிதாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ‘தக்கிரி பிக்கிரி’ என்று வார்த்தைகளைப் போட்டு உருவாக்கலாம். ஆனால் அவர்கள் பேசியது என்னவென்று என்னைத் தவிற ஆடியன்ஸ் யாருக்குமே புரியவில்லை என்பது ராஜமெளலி அறிய வாய்ப்பில்லை.  ஆனால் அவைகளைப் படத்தில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாவிட்டால் பாஹுபலியில் வரும் மொழி போலத்தான் ஆகும்.  

மொத்தத்தில் பாகுபலி என்பது ஒரு அக்மார்க் தெலுங்குப் படம் என்ற யாருக்கும் தெரியாத உண்மையை இந்த மிக நீண்ட விமர்சனத்தின் முடிவாக அறிவிக்கிறேன். தமிழ் சினிமா பாகுபலியையெல்லாம் தாண்டி இன்று நேற்று நாளை என வேற லெவலில் சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ராஜா காலங்களில் நடைபெற்ற ஒரு பழைய கதையை இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் கொடுத்த ராஜமெளலியை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனை கோடியையும் இத்தனை வருடத்தையும் ராஜமெளலி வேஸ்ட் செய்து ஒன்றுக்கும் ப்ரோயஜனம் இல்லாத ஒரு மொக்கை படத்தை கொடுத்திருக்கிறார் என்பதே என் கருத்து.1.   இந்தக் கட்டுரை நாலு பேராவது என்னைத் திட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் எழுதப்பட்டது. மற்றபடி ராஜமெளலிக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகறாரும் இல்லை. ஏனென்றால் என்னிடம் வாய்க்காலே இல்லை.

2.    இந்தப் படத்தில் வரும் கால கேயர்களுக்கும், டோத்ராக்கிகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தப் படத்தில் வரும் அந்த சீனுக்கும், இந்தப் படத்தில் வரும் இந்த சீனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுக்கும் இதுக்குமே ஒரு தொடர்பு இருக்கிறது. எங்க பக்கத்து வீட்டு அன்கிளுக்கும் ஆண்டிக்கும் இடையே கூட ஒரு தொடர்பு இருக்கிறது.

3.  Tale என்பதற்கு ஸ்பெல்லிங்க் கூடத் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஸ்பெல்லிங் தெரிந்தவர்களிடம் மாட்டினால் சினிமா முழிக்காது. லார்ட் ஆப் த ரிங்க்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்றவற்றைப் பார்த்தாலே Tale என்பதற்கு ஸ்பெல்லிங் தெரிந்து விடும். நானும் அதைப் பார்த்துத்தான் ஸ்பெல்லிங் கற்றுக் கொண்டேன். அப்படி லார்ட் ஆப்த ரிங்க்ஸ் பார்க்க முடியவில்லையென்றால் லார்டு ஆப் த ரிங்க்ஸைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி நான் எழுதிய ”லார்டு லபக்கு தாஸ்” என்ற மின் புத்தகத்தையாவது தரவிறக்கி படித்து ஸ்பெல்லிங் கற்றுக்கொள்ளுங்கள்.

படம் முடிந்த உடன் படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்த ஒருவனிடம் “You should come to BOFTA” என்றேன். அவன் கொஞ்சமும் யோசிக்காமல் ரைமிங்காக “அடிங்…….” எனக் கூற திரும்பிப் பார்க்காமல் வீடுவந்து சேர்ந்தேன்.