ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 9 August 2014

சாப்பாட்டுக் கடை - "மொத்து" மெஸ்!!!ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடையில் அடி வாங்கி. வழக்கமாய் காலை உணவு உண்ணும்போது  மட்டுமே வீட்டில் பூரிக் கட்டையால் அடி விழும். மதியம் அலுவலகத்தில் எவனிடமாவது உரண்டை இழுப்பதைப் பொறுத்தும் , இரவில் வீட்டிற்கு சரக்கை போட்டுவிட்டு லேட்டாக வருவதைப் பொறுத்தும் பூரிக்கட்டை, தோசைக்கரண்டி, ஈய்ய குண்டான் என விதவிதமான இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் அடி விழும்.  அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை அடி விழுவதை தவிர்ப்பதற்காக குடும்பத்துடன்  இருப்பதில்லை. சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், நான் என் வீட்டுக்கு பக்கத்திலுருக்கும் மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் போலவோ அல்லது பெண் வீட்டுக்காரர்  போலவோ சென்று சாப்பிட்டு சில சமயம் வசமாக மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அப்படி ஒரு  நாள் வீட்டில் எல்லோரும் வெளியே சென்ற போது , மதிய சாப்பாட்டிற்கு யாரை உசார் செய்யலாம் என்று  நினைத்துக் கொண்டே தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ்.

சைதாப்பேட்டை காவாயை தாண்டி, அந்த  தெரு முக்கில் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. நான் சிறு வயதில் குழந்தை  நட்சத்திரமாக அங்கு நிறைய முறை கூட்டத்தோடு கூட்டமாக சென்று சாப்பிட்டுவிட்டு நைஸாக சந்தில் பூந்து  எஸ்கேப்பாகி வந்திருக்கிறேன். கால மாற்றத்தில் சிக்கென்று சிறுத்தை குட்டியாக இருந்த உடம்பு, கருத்து  பெருத்த குட்டியாகிவிட்டதால், சந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் அவ்வளவு சுலபமாக பூந்து எஸ்கேப்  ஆக முடிவதில்லை. அப்படியே எஸ்கேப் ஆனாலும் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் என்னால்  ஓடவும் முடிவதில்லை. நூறு மீட்டர் தாண்டுவதற்குள் விரட்டிப் பிடித்து விடுகிறார்கள். இப்படி மதிய உணவை  பாதிக்கும் இத்தகைய காரணிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது மண்டபத்திற்கு அருகிலுள்ள மொத்து மெஸ்.


யாராவது சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஏமாற்றும் பட்சத்தில் மெஸ்ஸில் இருக்கும் அனைவரும் ஒன்றாய்  கூடி நன்றாக மொத்து மொத்து என மொத்தி அனுப்புவார்களாம். அதனாலேயே முத்து மெஸ் என்ற பெயர்  மாறி காலப் போக்கில் மொத்து மெஸ் என்றானது. நாம் வாங்காத அடியா. வழக்கம் போல நாம  போய்த்தான் பார்ப்போமே என்று அன்றைய காலையை ஆரம்பித்தேன். ஓப்பன் கிச்சன். உள்ளே விசாலமான  இடம். சின்னச் சின்ன டேபிள்களோடு சுத்தமாய் இருந்தது. இட்லி வடை, ஆர்டர் செய்தேன். இட்லிக்கு  ரெண்டு சட்னி, சாம்பார் என சைட் டிஷ். "வடகறி" கேட்டேன் காலியாகிவிட்டது என்றார்கள். வடகறி  இல்லையென்றால் என்ன? "சுப்ரமணியபுரம்" இருந்தால் கொடுங்கள் என்று என் சினிமா அறிவை வைத்து ஒரு  மொக்கை காமெடி செய்தேன். கல்லாவிலிருந்தவர் கடுப்பாகி போன வாரம் போட்ட மசால் வடையை என்  மண்டையை குறி வைத்து எறிய, வலது புற நெற்றியில் பட்டு மசால் வடை சைஸுக்கு புடைத்துவிட்டது.

இட்லி மிக மிருதுவாக  இருந்தது. வடை சைசில் சின்னதாய் இருந்தாலும் கிரிஸ்பி. அடுத்ததாய் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த  போது அந்தக் குரல் கேட்டது "டேய் நாயே உன் தட்டுல சாப்புடுறதா நெனைச்சி என் தட்டுல இருந்த  வடையையும் இட்லியையும் திண்ணுட்டடா சனியனே" என்று. லைட்டாக அசடு வழிந்துகொண்டே பக்கத்து  டேபிளுக்கு நகர்ந்தேன்.  உப்பலான பூரியை பக்கத்திலிருந்தவர் ஆர்டர் செய்திருக்க, நானும் பூரியென்றேன்.  கெட்டியான கிழங்காய் இல்லாமல், வெங்காயம் அதிகம் போட்டு கிழங்கோடு, கொஞ்சம் தளர இருக்கும்  கிழங்கு, காந்தல் இல்லாத எண்ணையில் பொரிக்கப்பட்டு  கிழங்கோடு சாப்பிடும்போது........ "உவ்வே" என்று  பக்கத்திலுருப்பவர் வாந்தி எடுத்துவிட்டு "த்தா... சாப்படாடா இது இத மனுசன் சாப்புடுவானா" என  கூறிவிட்டு கோபமாக எழுந்து சென்றார். ஆனால் நான் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அந்த  பூரியையும் கிழங்கையும் ரசித்து விமுங்கிக் கொண்டிருந்தேன். டிவைன்


மற்றொரு நாள் இரவு தோசையும், தோசை மாவு புளிக்காமல், நல்ல நைஸாக போட்டுக் கொடுத்தார்கள்.  அதை சாப்பிட்டுவிட்டு நைஸாக எஸ்கேப் ஆகப் பார்க்கும்போது சப்ளையர் பிடித்து விட்டான். வேறு  வழியில்லாமல் கொஞ்ச நேரம் மறுநாள் தோசைக்கு மாவாட்டிக் கொடுத்துவிட்டு வந்தேன்.  சப்பாத்தி, சென்னா சாப்பிட்டேன். சப்பாத்தி கொஞ்சம் ட்ரையாக இருந்தது. "ஏன் சப்பாத்தி ட்ரையா இருக்கு? ட்ரை வாஷ் பண்ணீங்களா?" என மாஸ்டரிடம் ஒரு காமெடியை அவிழ்த்து விட்டேன். பரோட்டா திருப்பிப் போட வைத்திருந்த சூடான கரண்டியை என் மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டார்.  மற்ற கடைகளில் மதியம் லஞ்ச் தான் இருக்கும் ஆனால் இங்கு மதிய நேரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஒரு நாள் ட்ரை செய்து பார்க்க வேண்டும். மிக முக்கியமான விஷயம். நல்ல விசாலமான இடம். காசு கொடுப்பவர்களுக்கு ஒரு பகுதி, காசு கொடுக்காமல் சாப்பிடுபவர்களை பிளந்து எடுக்க இன்னொரு தனிப் பகுதி என தர வாரியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். எவ்வளவு அடி விழுந்தாலும் வெளியில் தெரியாது. நாம் எப்பவும் போல டீசண்டாகவே திரியலாம். 

Wednesday, 6 August 2014

ஜிகிர்தண்டா- A review by யாரு நிவேதிதா!!!

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தாகமாக இருந்ததால் படக்கென்று குடித்துவிட்டென். இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. வாலிப வயதில் சகிலா படங்களுக்கு சென்றது. அதன் பிறகு அவ்வளவாக செல்வதில்லை.  எழுத நேரம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்  எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட பகுதி தவிற வெள்ளையாக இருந்த அனைத்து இடத்திலும் எழுதி வைத்து விட்டேன். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மண்டையில் நருக்கென்று கொட்டி விட்டு பேப்பரை வாங்கிச் சென்று விட்டார். தமிள் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும். எழுத்துக்கூட்டி படிக்க கொஞ்சம் நேரம் ஆகுமல்லவா?  ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்குள் முடித்து விடுவேன். ஏனென்றால்   ஆங்கிலக் கட்டுரைகளில் படத்தை மட்டும் பார்த்து விட்டு ஸ்கிப் செய்துவிடுவேன்

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அங்கயவது எதாவது வேலை இருக்குமா என பார்ப்பதற்காகவே செல்கிறேன், அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி ஒருசில வார்த்தைகள்.  அந்தப் படம் பற்றி விரிவாக இன்னுமொரு ஆங்கிலப் பத்திரிக்கை கையில் கிடைக்கும் போது  மேற்கூறியது போல் எழுத இருக்கிறேன்.  என்ன விஷயம் என்றால், www.nandhimazhai.com இணைய இதழில் ஆகஸ்ட் 15 முதல் கேள்வி பதில் பகுதி தொடங்க உள்ளது.  வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் அளிக்கிறேன். த்தா, ங்கொம்மா என்று ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: q2yaaru@nndhimazhai.com


மற்றபடி ஜிகிர்தண்டா தமிழில் நான் பார்த்த மிகச் சிறந்த  இரண்டு படங்களில் மூன்றாவதாக வருகிறது.  முதல் ஆரண்ய காண்டம், இரண்டவது கோஹினூர் காண்டம்.  ஆனால் ஆரண்ய காண்டம் என்னைப்போன்ற மங்கினிகளுக்கான படமாக ஆகி விட்டது.  மக்கள் ரசிக்கவில்லை.  ஜிகிர்தண்டா  எல்லோரையும் வசீகரித்து விட்டது.  சினிமா பற்றிய என் கட்டுரைகள் ஒன்றை கூட படித்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால் தான் அவரால் இப்படிப்பட்ட சினிமா எடுக்க முடிந்திருக்கிறது.  ஜென் நவீனத்துவ சினிமா என்றால் இதுதான்.  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.  விரிவாக தினகரன்  பேப்பர் வந்ததும் அதில் எழுதுவேன்.  நண்பர்கள் தவற விடாமல் இந்தப் படத்தைப் பார்த்து விடும் படி  சிபாரிசு செய்கிறேன்.  நாயகன் வந்த போது மணி ரத்னம் ஒரு மகத்தான இயக்குனராக இந்திய அளவில்  தெரிய வந்தார்.  அதற்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்டாக கார்த்திக் சுப்புராஜ் தான் என்று மேஜர் சுந்தர்ராஜன்  சொன்னார்.  படம் பார்த்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் மேஜர் சுந்தர்ராஜனும் நானும் ஒரே செட்டு.

கேள்விகளை அனுப்புங்கள்.  கேள்வி பதில் தொடரின் தலைப்பு: அடி உதை கம்பம்.  முதல் கேள்வியே  அதகளமாக இருக்கிறது.  நந்திமழையில் விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் நாக்கை பிடிங்கிக் கொள்ளும் படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நம்ப முடியவில்லை.   மற்றவை நந்திமழையில்..Comments are closed
Working time 9am - 7pm
Sunday holiday