செவ்வாய் என்றால் திங்களுக்கு அடுத்து வருவது. அதனால் பொதுவாகவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காது. அங்கு தண்ணி இல்லை என்ற ஆச்சரியமான விஷயத்தை கேட்டு 'திடுக்' என ஆடிப்போனேன். என்னடா சாம் இது செவ்வாயில் 'வாய்' இருந்தும் தண்ணி இல்லையே. இதைத்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ என எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் அந்த செவ்வாய் கிரக பதிவர் எனக்கு ஃபோன் செய்து அழுதார்.
அந்த செவ்வாய் கிரக பதிவரின் பெயர் ரீமாசென் (கீதா என்ற உண்மையான பெயரை அவர் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் ரீமாசென் என பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரீமாசென் ஒரு ஐ.டி கம்பனி இருக்கும் எட்டு மாடி கட்டிடத்தில் வேலை செய்யவில்லை. அதற்கு அருகில் இருக்கும் ஒரு டீ கடையில் 'டீ லீடர்' (Tea leader)ஆக வேலை செய்கிறார். அவரது கணவர் அடிக்கடி வேலை விஷயமாக புதன் கிரகம் சென்றுவிடுவதால் பெரும்பாலும் பெண்பதிவர் ரீமாசென் டீ கடையே கதி என இருந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த டீ கடைக்கு அருகில் இருக்கும் இட்லி கடையில் வேலை செய்யும் சேதுபதியின் (அவர் மிகவும் கொடுமையானவர் என்பதால் அவர் பெயர் மாற்றபடவில்லை) வீடு ரீமாசென்னின் வீட்டுக்கு அருகிலேயே இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ரீமாசென்னை டீ கடையில் ட்ராப் செய்துவிட்டு ரீமாசென்னின் கணக்கில் ஓசி டீ குடிப்பதை சேதுபதி தன் வழக்கமாக வைத்துள்ளார். சரி சேதுபதியும் இட்லி லீடராக பணிபுரிவதால் டீசண்டானவர் தானே என நினைத்து ரீமாசென்னும் இதை அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் ரீமாசென்னின் பிராஜக்ட் மானேஜர் விஷால் (கோவிந்தனின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் விஷால் என மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் ரீமாசென்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். முதலில் கண்டிக்க நினைத்த ரீமாசென் பின் தன் டீ-லீடர் பதவி பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்திருக்கிறார்.
சில நாட்கள் கழித்து விஷால் ஒருபடி மேலே சென்று ரீமாசென்னின் வீட்டுக்கே சென்றுவிட்டார். ஆனால் அன்று செவ்வாய்கிழமை என்பதால் புதன் கிரகத்துக்கு செல்லாமல் செவ்வாய் கிரகத்திலேயே இருந்திருக்கிறார் ரீமாசென்னின் கணவர் சுரேஷ். ஆனால் இது விஷாலுக்கு தெரியாது. ஆனால் இது ரீமாசென்னுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்துவிட்டது.
விஷால் மெல்ல படியேறியிருக்கிறார். டக் டக் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருக்கிறார். கதவு அருகில் வந்து தட்ட போகும்போதுதான் 'அதை' பார்த்திருக்கிறார் விஷால். பின் (அதை) காலிங் பெல்லை அமுக்கியிருக்கிறார். நிமிடங்கள் ஓடின. மீண்டும் அமுக்கினார். நிசப்தம்.
கதவு திறக்கப்பட்டது. பார்த்தால் ரீமாசென்னின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரீமாசென் ஓடிவந்து அழுதுகொண்டே கணவரை கட்டிக்கொண்டு பேசினார், "இவர் தாங்க என் பிராஜக்ட் மாஸ்டர். என்கிட்ட எப்பவுமே தவறா நடந்துக்குறாரு" என சொல்லி கதறியிருக்கிறார். ஏன் சாம் இப்படிலாம் கூட நடக்குமா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
ஒருநிமிடம் சுரேஷ் கண்ணிமைக்காமல் விஷாலை பார்த்திருக்கிறார். பின், "ஏம்பா விஷால். பாக்க வாட்டசாட்டமா இருக்கியே தவறா நடக்காம நேரா நடக்க கூடாதாப்பா?" எனக்கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு மனம் திருந்திய விஷால் பின் சனி கிரகத்துக்கு மாற்றல் ஆகிபோய்விட்டாராம்.
ஆனால் சனி கிரகத்தில் இன்னும் விஷால் தவறாக தான் நடக்கிறாராம். ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தை சேர்ந்த அந்த பெண்பதிவர் நிம்மதியாக தன் குழந்தைகளுடன் வசிக்கிறாராம்.
நாம் கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள்:
1) பதிவின் பெயர் சீரியசா இருக்கேனு உள்ள வந்து பாத்துரக்கூடாது. பாத்தவன் வாழ்க்கைல தான் 'திடுக்' சோகம் வந்துரும்!
2)இதில் வந்த சேதுபதிக்கும் இந்த பதிவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சும்மா ஒரு பத்தி எக்ஸ்ட்ரா ஆகட்டுமே என சேர்த்துவிட்டேன்.
3)இதே கதையை நான் திருப்பியும் பதிவா போட்டா நீங்க கண்டுக்க கூடாது. ஒருநாளைக்கு முப்பது பதிவு போடுறதுனால தவறு நடக்குறது இயல்பு.
4) இதே செய்தியை நீங்க ஜூ.வி, ஆ.வி, குமுதம் ரிப்போர்ட்டர்ல படிச்சிருக்கலாம். ஆனா அப்படி காசு கொடுத்து மூணு புக்கு வாங்குறதுக்கு பதிலா இங்க வந்தீங்கன்னா அதே செய்திய இலவசமா படிச்சுக்கலாம்.
டிஸ்கி: நடுவில் வரும் படங்களுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் பதிவுக்கும் பதிவுக்குமே சம்பந்தமில்லை!

